பெங்களூர் அனுபவங்கள் # 2

பதிவின் வடிவம்

புது மாப்பிள்ளை, சொறி சிரங்கு வந்தவன், சமீபமாக கிறுக்க (எழுத) தொடங்கியவன். இந்த மூவருக்கும் பொதுவான  ஒரு விடயம்???. கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாது. இதோ எவ்வித கொலை மிரட்டல்களும் இல்லாமல் அடுத்த பதிவு.

ஸ்பானிஷ், சீனம், ஹிந்தி போன்ற மொழிகளுக்கு பின் அதிகமாக பேசப்படும் மொழி ஆங்கிலம். உலகில் தாய் மொழிக்கு பின் இரண்டாவது மொழியாக அதிகம் பயன்படுவது ஆங்கிலம். இந்தியாவின் IT வளர்ச்சிக்கு ஆங்கிலமும் ஒரு முதன்மை காரணம்.இப்படியாக ஆங்கிலலல…….

“ஏய்! ஏய்! நிறுத்து !!ஏன் இப்படி ஒரேடியா ஆங்கிலத்த பத்தி கூவுற?”

காரணம் இருக்கு. இந்த பதிவு English பத்தினது…

ஆரம்ப பள்ளிப் படிப்பு ஆங்கில வழியில். 5 வருடங்கள். பின்னர்  முழவதும் அப்பாவின் தமிழ் பற்றுதலின் விளைவாக தமிழ் வழிக்கல்வி. கல்லூரியில் நுழைந்த பின்னர் தான் பிரச்சனை ஆரம்பமானது. சகலமும் (பாடப் புத்தகங்கள்) ஆங்கில மயம். 5 வரிகளை முடிப்பதற்குள் 50 முறை அகராதியை புரட்ட  வேண்டும். அப்போதெல்லாம் ஆங்கில பேச்சில் அவ்வளவாக ஞானம் கிடையாது (அட! யாருப்பா அது… இப்ப மட்டும் ஒழுங்கானு கேக்குறது). Communication Class போன்ற 45 நிமிட வகுப்புகளை கடத்த பட்ட பாடு…ஒரு யுகம் போலிருக்கும். ஏதோ ஒரு வழியாக கல்லூரி முடித்தாயிற்று. ஆங்கில வழியில் படிக்காததால் ஒன்றும் பெரிதாக இழந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது இப்போது. Chetan bhagat , Aravind Adiga என்றால் சமாளித்து விடலாம்.Sidney Sheldon போன்றவர்களுக்கு Dictionary தேடவேண்டும்.

சிறு சம்பந்தமே இல்லாத ஒரு பதில் எவ்வித முக பாவனையை உருவாக்கும்….

BTM Layout லிருந்து Marathali நோக்கி பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன். காலையில் , பொதுவான அலுவலக நேரம். உட்கார இடமில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிற்பதற்காக பேருந்தின் வேகம் குறைய தொடங்கியது. எனக்கு பின் இருந்தவர் என்னிடம் ” I am getting Off” என்றார். அவருடைய Accent அவ்வளவாக எனக்கு விளங்கவில்லை. பேருந்து நிறுத்தத்தில் பொதுவாக இது எந்த நிறுத்தம் என கேட்கப்படும். நானும் அவ்வாறே அவர் கேட்கிறார் என எண்ணி ” i dont know ” என்றேன். என்னுடைய சிறு வழிவிடுதலை மட்டும் எதிர்ப்பாத்த அவர் என்னுடைய வினோதமான  “பதிலை” பொறுத்துக் கொள்ளாமல்  ஒரு விசித்திர முக பாவனையை என்னிடம் சிந்திவிட்டு என்னை கடந்து சென்றார். அவர் இறங்கிய பின்னரே ” நான் இறங்குகிறேன்” என அவர்  கூறியதை உணர்த்தியது மூளை.

‘நான் இறங்குகிறேன்… கொஞ்சம் வழி’ என்பதற்கும் ‘எனக்கு அதெல்லாம் தெரியாது’  என்பதற்கும் என்ன சம்பந்தம்?!?! 🙂

Advertisements

பெங்களூர் அனுபவங்கள் …

பதிவின் வடிவம்

நாடோடி வாழ்க்கையின் ஒரு பகுதியாக பெங்களூர் வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன.பெங்களூரில் என்னுடைய ஆரம்ப மாதங்களில் தான்  என் வாழ்வில் மறக்க முடியாத பல தருணங்கள் நடந்த்தேறின.நீண்ட தேடலுக்கு பின் இப்படி ஹாயாக அலுவலக கணினியில் இந்த பதிவை எழுதும் அளவிற்கு கழுத்தை நெறிக்காத ஒரு வேலை கிடைத்தது.அதற்கு முன் கண்ணீர், சோகம்,மகிழ்ச்சி நிறைந்தப் பக்கங்களை எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டு தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அனுமதித்தது வாழ்க்கை.

பெங்களுருடான என்னுடைய சிறு சிறு அனுபவங்களை இங்கு  எழுத எத்தனித்துள்ளேன்.நண்பர்கள் படித்து விட்டு திட்ட நினைத்தால் பின்னூட்டமிடவும் .

இனி மேட்டருக்கு வருவோம்… மேட்டர் என்றவுடன் இது MG Road,Brigade Road பற்றிய பதிவு என எண்ண வேண்டாம்…

அனைவரும் அறிந்தது போல பெங்களூர் நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம்.பெங்களுரின் பெரும்பகுதி போக்குவரத்து சேவை BMTC யால் செவ்வென செய்யப்படுகிறது.நாட்டில் லாபகரமாக ‘ஓடும்’ ஒரு சில போக்குவரத்து சேவைகளில்  BMTC  யும் ஒன்று.லாபகரமாக என்பதற்கு காரணம் ‘நாடுப் போற்றும்’ கர்நாடக அரசியல்வாதிகள் பல யுகங்களுக்கு முன்னரே டிக்கெட்  விலையினை சாதுர்யமாக ஏற்றியது தான்.

வெளியூரிலிருந்து வரும் மக்கள் டிக்கெட் விலையினை கண்டு நிச்சயம் புருவம் உயர்த்துவார்கள்.இவ்விசியத்தில் செல்வி ஜெ ஜெயலலிதா too late தான்.பெரிய மால்களில் விண்டோ ஷாப்பிங் செய்யும் IT கனவான்களை இது ஒன்றும் பாதிக்காது.ஜார்கண்ட்.பிகார் மற்றும் வட கர்நாடகாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிளார்களையும் பாதித்ததாக தெரியவில்லை.ஹாயாக கொரியன் மொபைலில் ஷீலா கி ஜவானி கேட்டுக் கொண்டே பயணிக்கிறார்கள்.

இப்ப நம்ம பிரச்சனை என்னனா… மற்ற பெரு நகர பேருந்து நடத்துனர்களைப் போல் அல்லாமல் BMTC நடத்துனர்கள் ஒரு விசித்திரமான பழக்கத்தை கொண்டுள்ளனர்.அது என்னனா  இப்ப நீங்க 6 ரூபாய் பயண மதிப்புள்ள ஒரு இடத்துக்கு போக நினைக்கிறீங்க..10 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேக்கிறீங்க..நடத்துனர் தருவதோ 5 ருபாய் மீதி..குழப்பத்துடன் டிக்கெட் வேண்டி நடத்துனர் முகத்தை பார்த்தால் உங்களுக்கு எஞ்சுவதோ அவரின் அசட்டு சிரிப்புதான்..ஆக உங்க 10 ரூபாயில் உங்களுக்கு 5 அவருக்கு 5 . இவ்வாறாக ஒரு மைக்ரோ ஊழலே நடைபெறுகிறது.மீறி டிக்கெட் தான்  வேணும் என்று அடம்பிடித்தால் எரித்து விடுவதுப் போன்ற பார்வைக்கு பின் உங்களுடைய நியாயம், நேர்மை மற்றும் இன்ன பிறவெல்லாம் காப்பற்றப்படும்.

இப்படி பட்ட பல நடத்துனர்கள் தன் ஓய்வுக்கு பின் சர்ஜாபூர் பகுதியில் ஒரு 2BHK பிளாட் வாங்கும் வல்லமை பெறுவார்கள் என்பது என் கணிப்பு.எனக்கும் இதுப் போன்ற அனுபவங்கள் நடைப்பெறும் போதெல்லாம் ‘தமிழன்’  விஜய் போல எதாவது செய்ய வேண்டும் என எண்ணுவேன்(விஜய் ரசிகர்கள் மன்னிப்பார்களாக ).”ஹே ஹேய்! நேத்து ஊற வச்ச துணி இன்னும் தொவைக்காம அப்படியே கெடக்கு” என என் மனசாட்சி ஏளனமாய் என்தலையில் கொட்டும்.நானும் உங்களையெல்லாம் தட்டிக்கேக்க நிச்சயம் வேலாயுதம் வருவான்டா(விஜய் ரசிகர்கள் மீண்டும் மன்னிப்பார்களாக ) என சொல்லி கொண்டு ஜன்னலுக்கு வெளியே நிற்கும் பிகர் மீது என் கவனத்தை திருப்புவதுண்டு…..

முதல் பதிவு….

பதிவின் வடிவம்

பிறரால் இதை விட சிறப்படையுமோ என்ற பயத்தினால் உருவாவது தான் சிறந்த எழுத்து என்பது சுஜாதாவின் வாக்கு. இன்று இணையத்தில் எழுதும் பல பதிவர்களுக்கு சுஜாதாவின் எழுத்து தான் ஒரு உந்துக்கோல். நானும் அதுக்கு விதிவிலக்கல்ல. ஆயிரபக்க வாசிப்பு தான் தனித்துவமான சிறந்த ஒரு வரி எழுத்துக்கு தொடக்கம். சிறுவர்மலர், சிறுவர்மணி என துவங்கிய என் வாசிப்பு ஆனந்த விகடன் மூலம் அடுத்த நிலையை அடைந்து ,சுஜாதா,எஸ்.ராமகிருஷ்ணன்,நாஞ்சில் நாடன்,சாரு நிவேதிதா போன்றவர்களால் எழுத்து கலை மீது ஒரு நாட்டம் கொள்ள வைத்தது .

மிகுந்த ஆசைகளுடன் தொடங்கிய இந்த வலைதளத்தை அலுவல்களையும்,காலநேரத்தையும் காரணம் காட்டி இணையத்தில் அநாதையாக விட விருப்பமில்லை. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்….