Category Archives: புனைவு

செந்நிற கனவு…

பதிவின் வடிவம்

குதிரைகள் தடத்தடத்து காற்றைக்  கிழித்து  விரைகின்றன. அவைகளின்  குலுங்கல்கள்  பூமியிலிருந்து மேலெழும் கனத்த இடிகளென என் அடிவயிற்றை பதம் பார்க்கும் ஒரு உணர்வு.  குளம்பு சத்தத்திற்கு இணையாக தீப்பந்தம் காற்றுடன் நடத்தும் தாண்டவம் என் ஆழ் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் தெமுஜினுடைய வார்த்தைகளுக்கு வார்ப்பூட்டுகிறது. கைகள் பின்னமாக கட்டுண்டிருந்தாலும் என் வயிற்றை    இறகென வருடுகிறது. வயிற்றில் வளரும்  கருவை அரவணைக்கின்றது. ஆழ் மனதில் ஓயாமல் எழும்பும் தெமுஜினுடைய வாத்தைகளை என் கருவை அடையும் வரை எதிரொலிக்க விடுகிறேன். இப்போது என் கர்ப்ப பை அவனுடைய வார்த்தைகளால் நிரம்பி  வழிகிறது. திருப்தியுடன் கண்ணயர்கிறேன்.

நான் தான் போர்த்தி. ஓங்க்கிராத் பழங்குடியை சேர்ந்தவள். சில நாழிகைகள் முன்பு வரை போரிஜின் வம்சத்தை சேர்ந்த தெமுஜினின் மனைவியாக இருந்தவள். இளமை பருவத்தில் பாதி நாட்களை வம்ச பலி ஆளாகவும், உயிருக்கு அஞ்சி ஓடியவனாகவும் கழித்தான் தெமுஜின். உயிர் வாழ்தல் பின்  என் கரம் பற்றுதல் இதுவே  அவன் குறிக்கோளாக இருந்தது. என்னுடைய 12 ஆம் வயதில் என்னை மனைவியாக தேர்ந்தெடுத்தான். மனைவியின் கரம் பிடிக்க பாலியியல் மூப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பது எங்கள் பழங்குடி வழக்கம். இடைப்பட்டக் காலங்களில் தான் தெமுஜின் வாழ்க்கை மாறியது. அவனுடைய அப்பா எசுக்கேயின் எதிரிகள் அவரை கொன்று அவனை வம்ச பலி ஆளாக அடிமைப்படுத்தினர். தன்னுடைய நாட்களை அடிமையாக எண்ணிக்கொண்டிருந்தவன்.

இன்னும் குதிரைகளின் ஓட்டம் தொடருகிறது. கண் விழிக்கிறேன். கீழ் வானம் இன்னும் வெளுக்கவில்லை. மேற்கித்களின் எல்லையை நெருங்க நெருங்க என் உடலின் ஏதோவொரு பகுதியிலிருந்து விஷமென, பயம் கொடிய கிளைகளுடன் வெடித்து பரவுகிறது. இரத்த வெறி கொண்ட ஓநாய்களின் கூட்டத்தில் அகப்பட்டவளாக உணருகின்றேன். கூறிய பற்களிலிருந்து சிந்தும் இரத்த துளி மண்ணில் பட அகோர பேரிரைச்சலாக ஒலிக்கிறது. என் சக பெண்களின்  குருதியினை குடித்த வெறி தீரா முகங்களுடன் என்னை வட்டமிடுகின்றன அவைகள். எங்கிருந்தோ தெமுஜின் ஓநாய் கூட்டத்திற்கு நடுவில் குதிக்கிறான். எங்களை ஒவ்வொரு அடி அடியென நெருங்க  நெருங்க ஓநாய் கூட்டங்கள் மேற்கித் வீரர்களாக உருமாரி எழுகின்றனர். கண்முடித்தனமாக போரிடும்  தெமுஜின் வீரம்  மேற்கித் வீரர்களிடம் அடிபணிகிறது.  மேற்கித் வீரர்களின் மூர்க்கம் தெமுஜின் கால்களை ஒடித்து மண்டியிட செய்கிறது. குருதியாக வழியும் எச்சில் ஒழுக நான் கைகள் கட்டப்பட்டு குதிரையில் ஏற்றப்படுவதை பார்க்கிறான். அவனுடைய பார்வைகள் அவன்  வார்த்தைகளை எரியுட்டுகின்றன.

என் பதினாறாம் வயதில் தெமுஜின் அவன் எதிரிகளிடமிருந்து தப்பித்து என்னை தேடிவந்தான். முழு சுதந்திர காற்றை என்னுடன் சுவாசிக்க விரும்பினான். என் பெற்றோர்களுடன் சம்மதத்துடன் நான் அவன் கரம் பற்றினேன். எங்களுக்கான தலை மறைவு வாழ்க்கையை தேடி கேந்தி மலையடிவாரத்தை நோக்கி பயணமானோம். கேந்தி மலை அவனுடைய வாழ்க்கையுடன் நீண்ட தொடர்புடையது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் அது துறவி போல அமர்ந்து கவனிப்பதாக அடிக்கடி  சொல்லுவான். கேந்தி மலையின் பசுமை எங்களை அரவணைத்தது. காட்டு குதிரைகளை வேட்டையாடுவதை தன் பொழுதுப் போக்காக மாற்றிக் கொண்ட தெமுஜின் ஒரு அற்புத கனவு கண்டுக்கொண்டிருந்தான். எங்களுடைய முடிவில்லா நிண்ட காதலின்,உடலுறவின் ஒவ்வொரு வடிகாலின் போதும் அவனுடைய கனவு உயிர்பெறும். என் அடிவயிற்றில் அவன் முகம் புதைய கனவுகளை, வார்த்தைகளை தேடிப்பிடித்து விவரிப்பான். அவனுடைய வார்த்தைகளில் இலட்சோப இலட்ச வீரர்கள் அணிவகுப்பார்கள், ஆயிரக்கணக்கான குதிரைகளின் சத்தம் மேகங்களில் எதிரொலிக்கும், எதிரிகள் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்ப்பார்கள், அவனுடைய சிம்மாசனம் வளர்ந்துக்கொண்டேயிருக்கும்…. அந்த  சிம்மாசனம் அவனுக்கு பிறகு அவனுடைய மகனுக்கென கூறி என் அடிவயிறிணை முத்தமிட்டு  கனவினை முடிப்பான். அனால்  எங்களின் இந்த வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை…

மேற்கித்துகளின் கூடாரத்தை  அடைந்துவிட்டேன். குதிரையின் வேகம் முற்றிலும் குறைய நான் கீழே இறக்கிவிடப்படுகிறேன். எனது கை கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. மேற்கித்துகள் ஜடாமுடியுடன் அலையும் பித்தர்கள். எதிரிகளுடன் மூர்க்கமாக போர்  புரிவதையும் , வெற்றி களிப்பு தீர பெண்களை புணர்வதையும் வாழ்க்கையாக கொண்டவர்கள். இதோ இன்னும் சில நாழிகைகளில் என்னுடைய வாழ்வு தீர்மானிக்கப்படும். அடிமைப்படுத்தப்பட்ட நான் இன்றிலிருந்து வேறொருவனின் மனைவியாக வாழ துவங்க வேண்டும். இது எங்கள் பழங்குடி குழுக்களில் பின்பற்றப்படும் முறைகளில்  ஒன்று. தெமுஜின் மனைவியாக அவன் கனவுகளில் அவன் கைக்கோர்த்து நடந்தவள் நான். அவனுடைய கருவினை அவனுடைய கனவுகளை, வார்த்தைகளை கொண்டு ஊட்டி வளர்த்தவள் நான். அனால் இன்றிறிரவு வேறு ஒருவனின் காம இட்சைகளுக்கு இணங்கவேண்டும். காம உணர்ச்சியை தூண்டும் சதை பிண்டமாக அவன் அருகில் படுக்கவேண்டும். அவனுடைய கூறிய நகங்கள்  என் சதைகளை கீற, அவனுடைய கரங்கள் என் அங்கங்களை தொட அனுமதிக்க வேண்டும். அனால் நிச்சயமாக என்னை அவன்  புணரும் போதும்  கூட என் மனகண்ணில் தெமுஜின் தோன்றுவான்…சிறகொடிந்த பறவையாக என்னை வட்டமிடுவான்… அவனுடைய பார்வை மீண்டும் மீண்டும் அதையே நினைவுப்படித்திக்கொண்டிருக்கும்… அவனுடைய கனவு… அவனுடைய வார்த்தைகள்…கனவின் நிட்சியாக, வார்த்தைகளின் வழியே அலைந்தது திரிந்து என்னை தேடி  வருவான்… என்னை மீட்ப்பான்…தன் கனவில் வெற்றிப் பெறுவான்…

——————————————————————————————————————————————–

பல பழங்குடி குழுக்களை ஒன்றிணைத்து தன் கனவினை பின்னாளில் நினைவாக்கினான் தெமுஜின். உலகின் சிறந்த இராணுவ கட்டமைப்பை உருவாக்கி மங்கோலிய பேரரசை உருவாக்கிய தெமுஜின் செங்கிஸ் கான் என்ற பட்ட பெயரை சூட்டிக்கொண்டான்.

Advertisements