Category Archives: குறுங்கதை

செந்நிற கனவு…

பதிவின் வடிவம்

குதிரைகள் தடத்தடத்து காற்றைக்  கிழித்து  விரைகின்றன. அவைகளின்  குலுங்கல்கள்  பூமியிலிருந்து மேலெழும் கனத்த இடிகளென என் அடிவயிற்றை பதம் பார்க்கும் ஒரு உணர்வு.  குளம்பு சத்தத்திற்கு இணையாக தீப்பந்தம் காற்றுடன் நடத்தும் தாண்டவம் என் ஆழ் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் தெமுஜினுடைய வார்த்தைகளுக்கு வார்ப்பூட்டுகிறது. கைகள் பின்னமாக கட்டுண்டிருந்தாலும் என் வயிற்றை    இறகென வருடுகிறது. வயிற்றில் வளரும்  கருவை அரவணைக்கின்றது. ஆழ் மனதில் ஓயாமல் எழும்பும் தெமுஜினுடைய வாத்தைகளை என் கருவை அடையும் வரை எதிரொலிக்க விடுகிறேன். இப்போது என் கர்ப்ப பை அவனுடைய வார்த்தைகளால் நிரம்பி  வழிகிறது. திருப்தியுடன் கண்ணயர்கிறேன்.

நான் தான் போர்த்தி. ஓங்க்கிராத் பழங்குடியை சேர்ந்தவள். சில நாழிகைகள் முன்பு வரை போரிஜின் வம்சத்தை சேர்ந்த தெமுஜினின் மனைவியாக இருந்தவள். இளமை பருவத்தில் பாதி நாட்களை வம்ச பலி ஆளாகவும், உயிருக்கு அஞ்சி ஓடியவனாகவும் கழித்தான் தெமுஜின். உயிர் வாழ்தல் பின்  என் கரம் பற்றுதல் இதுவே  அவன் குறிக்கோளாக இருந்தது. என்னுடைய 12 ஆம் வயதில் என்னை மனைவியாக தேர்ந்தெடுத்தான். மனைவியின் கரம் பிடிக்க பாலியியல் மூப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பது எங்கள் பழங்குடி வழக்கம். இடைப்பட்டக் காலங்களில் தான் தெமுஜின் வாழ்க்கை மாறியது. அவனுடைய அப்பா எசுக்கேயின் எதிரிகள் அவரை கொன்று அவனை வம்ச பலி ஆளாக அடிமைப்படுத்தினர். தன்னுடைய நாட்களை அடிமையாக எண்ணிக்கொண்டிருந்தவன்.

இன்னும் குதிரைகளின் ஓட்டம் தொடருகிறது. கண் விழிக்கிறேன். கீழ் வானம் இன்னும் வெளுக்கவில்லை. மேற்கித்களின் எல்லையை நெருங்க நெருங்க என் உடலின் ஏதோவொரு பகுதியிலிருந்து விஷமென, பயம் கொடிய கிளைகளுடன் வெடித்து பரவுகிறது. இரத்த வெறி கொண்ட ஓநாய்களின் கூட்டத்தில் அகப்பட்டவளாக உணருகின்றேன். கூறிய பற்களிலிருந்து சிந்தும் இரத்த துளி மண்ணில் பட அகோர பேரிரைச்சலாக ஒலிக்கிறது. என் சக பெண்களின்  குருதியினை குடித்த வெறி தீரா முகங்களுடன் என்னை வட்டமிடுகின்றன அவைகள். எங்கிருந்தோ தெமுஜின் ஓநாய் கூட்டத்திற்கு நடுவில் குதிக்கிறான். எங்களை ஒவ்வொரு அடி அடியென நெருங்க  நெருங்க ஓநாய் கூட்டங்கள் மேற்கித் வீரர்களாக உருமாரி எழுகின்றனர். கண்முடித்தனமாக போரிடும்  தெமுஜின் வீரம்  மேற்கித் வீரர்களிடம் அடிபணிகிறது.  மேற்கித் வீரர்களின் மூர்க்கம் தெமுஜின் கால்களை ஒடித்து மண்டியிட செய்கிறது. குருதியாக வழியும் எச்சில் ஒழுக நான் கைகள் கட்டப்பட்டு குதிரையில் ஏற்றப்படுவதை பார்க்கிறான். அவனுடைய பார்வைகள் அவன்  வார்த்தைகளை எரியுட்டுகின்றன.

என் பதினாறாம் வயதில் தெமுஜின் அவன் எதிரிகளிடமிருந்து தப்பித்து என்னை தேடிவந்தான். முழு சுதந்திர காற்றை என்னுடன் சுவாசிக்க விரும்பினான். என் பெற்றோர்களுடன் சம்மதத்துடன் நான் அவன் கரம் பற்றினேன். எங்களுக்கான தலை மறைவு வாழ்க்கையை தேடி கேந்தி மலையடிவாரத்தை நோக்கி பயணமானோம். கேந்தி மலை அவனுடைய வாழ்க்கையுடன் நீண்ட தொடர்புடையது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் அது துறவி போல அமர்ந்து கவனிப்பதாக அடிக்கடி  சொல்லுவான். கேந்தி மலையின் பசுமை எங்களை அரவணைத்தது. காட்டு குதிரைகளை வேட்டையாடுவதை தன் பொழுதுப் போக்காக மாற்றிக் கொண்ட தெமுஜின் ஒரு அற்புத கனவு கண்டுக்கொண்டிருந்தான். எங்களுடைய முடிவில்லா நிண்ட காதலின்,உடலுறவின் ஒவ்வொரு வடிகாலின் போதும் அவனுடைய கனவு உயிர்பெறும். என் அடிவயிற்றில் அவன் முகம் புதைய கனவுகளை, வார்த்தைகளை தேடிப்பிடித்து விவரிப்பான். அவனுடைய வார்த்தைகளில் இலட்சோப இலட்ச வீரர்கள் அணிவகுப்பார்கள், ஆயிரக்கணக்கான குதிரைகளின் சத்தம் மேகங்களில் எதிரொலிக்கும், எதிரிகள் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்ப்பார்கள், அவனுடைய சிம்மாசனம் வளர்ந்துக்கொண்டேயிருக்கும்…. அந்த  சிம்மாசனம் அவனுக்கு பிறகு அவனுடைய மகனுக்கென கூறி என் அடிவயிறிணை முத்தமிட்டு  கனவினை முடிப்பான். அனால்  எங்களின் இந்த வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை…

மேற்கித்துகளின் கூடாரத்தை  அடைந்துவிட்டேன். குதிரையின் வேகம் முற்றிலும் குறைய நான் கீழே இறக்கிவிடப்படுகிறேன். எனது கை கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. மேற்கித்துகள் ஜடாமுடியுடன் அலையும் பித்தர்கள். எதிரிகளுடன் மூர்க்கமாக போர்  புரிவதையும் , வெற்றி களிப்பு தீர பெண்களை புணர்வதையும் வாழ்க்கையாக கொண்டவர்கள். இதோ இன்னும் சில நாழிகைகளில் என்னுடைய வாழ்வு தீர்மானிக்கப்படும். அடிமைப்படுத்தப்பட்ட நான் இன்றிலிருந்து வேறொருவனின் மனைவியாக வாழ துவங்க வேண்டும். இது எங்கள் பழங்குடி குழுக்களில் பின்பற்றப்படும் முறைகளில்  ஒன்று. தெமுஜின் மனைவியாக அவன் கனவுகளில் அவன் கைக்கோர்த்து நடந்தவள் நான். அவனுடைய கருவினை அவனுடைய கனவுகளை, வார்த்தைகளை கொண்டு ஊட்டி வளர்த்தவள் நான். அனால் இன்றிறிரவு வேறு ஒருவனின் காம இட்சைகளுக்கு இணங்கவேண்டும். காம உணர்ச்சியை தூண்டும் சதை பிண்டமாக அவன் அருகில் படுக்கவேண்டும். அவனுடைய கூறிய நகங்கள்  என் சதைகளை கீற, அவனுடைய கரங்கள் என் அங்கங்களை தொட அனுமதிக்க வேண்டும். அனால் நிச்சயமாக என்னை அவன்  புணரும் போதும்  கூட என் மனகண்ணில் தெமுஜின் தோன்றுவான்…சிறகொடிந்த பறவையாக என்னை வட்டமிடுவான்… அவனுடைய பார்வை மீண்டும் மீண்டும் அதையே நினைவுப்படித்திக்கொண்டிருக்கும்… அவனுடைய கனவு… அவனுடைய வார்த்தைகள்…கனவின் நிட்சியாக, வார்த்தைகளின் வழியே அலைந்தது திரிந்து என்னை தேடி  வருவான்… என்னை மீட்ப்பான்…தன் கனவில் வெற்றிப் பெறுவான்…

——————————————————————————————————————————————–

பல பழங்குடி குழுக்களை ஒன்றிணைத்து தன் கனவினை பின்னாளில் நினைவாக்கினான் தெமுஜின். உலகின் சிறந்த இராணுவ கட்டமைப்பை உருவாக்கி மங்கோலிய பேரரசை உருவாக்கிய தெமுஜின் செங்கிஸ் கான் என்ற பட்ட பெயரை சூட்டிக்கொண்டான்.

Advertisements

ராட்டினம்

பதிவின் வடிவம்

திகாலை 4.30 மணி. சுமித்திரா  சிறிது தலைவலியுடனே எழுந்தாள். அலைபேசியில் மணியைப்பார்த்த பின்புதான் தான் நன்றாக தூங்கிவிட்டதை உணர்ந்தாள். பாதகம் ஒன்றுமில்லை ஆட்டோ பிடித்து 5 மணிக்குள் மெஜஸ்டிக்  சென்று விட்டால் முதல் பேருந்தில் ஏறி 6 மணிக்குள் வீட்டுக்கு சென்றுவிடலாம். மஞ்சு எழுவதற்குள் சென்றுவிடவேண்டும். நிச்சயம்  சென்றுவிடலாம்.  அடுத்த சில நொடிகளில், மாடிப்படிகளில்  இருந்து இறங்கி தெருமுனைக்கு வந்தாள். ஆட்டோ கிடைப்பதில் சிரமம் ஒன்றும்  ஏற்படவில்லை, 50 ரூபாய் என்றான் ஆட்டோ காரன். பேரம் பேசாமல் ஏறிக்கொண்டாள்.

முதல் பேருந்து இன்னும் புறப்படவில்லை. பேருந்தில் ஏறி திறந்திருந்த ஜன்னலை நன்றாக இழுத்து மூடிவிட்டு சாவகாசமாக அமர்ந்தாள். மணி 4.50 தான். நடத்துனரும், ஓட்டுனரும் வெளியே தேநீர் அருந்திக்கொண்டுருந்தனர். பேருந்தில் வழக்கம் போல கூட்டம் ஒன்றும்  இல்லை. வழக்கமாக பூக்களை எடுத்துசெல்லும் ஒரு பாட்டியும் இன்னும் சிலர் மட்டுமே இருந்தனர். பாட்டி எப்பவும் போல  புன்னகைத்தாள். சுமித்திராவும்  பதிலுக்கு பேருக்காக புன்னகைத்தாள். பேருந்து நகர தொடங்கியது. சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டாள்.

பெரும்பான்மையான நாட்கள் இப்படி அதிகாலையிலே வீடு திரும்ப வேண்டியுள்ளது. அபூர்வமாக சில நாட்களில் மட்டும் நல்லிரவில்.  உடல் சோர்வான நாட்களில் வெளியே  செல்வதேயில்லை. நன்றாக இழுத்து மூடிக் கொண்டு படுத்துவிடுவாள். சனி ஞாயிறு கட்டாய விடுமுறை.  இது போன்ற அமைதியான பேருந்து பயணங்களிலே மஞ்சுவின் நினைப்பு தானாக வந்துவிடுகிறது. மஞ்சு 6 ஆம் வகுப்பு படிக்கிறாள்.  மஞ்சுவை  நன்றாக படிக்க வைத்து பெரிய பெரிய கண்ணாடிகள் பதியப்பட்ட  அலுவலகத்திற்கு  வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே  சும்திராவுக்கு. மஞ்சுவும் நன்றாக தான் படிக்கிறாள். புதிதாக குடியேறிய வீடு மட்டும் தான் மஞ்சுவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அருகில் வீடுகள் இல்லாத தனிமை கட்டிடம். பழைய வீடு இருந்த பகுதி நெருக்கமாக பல வீடுகள் இருந்த இடம். மஞ்சுவிற்கு தோழிகளும் அங்கு  அதிகமாக இருந்தனர்.

கைப்பையிலிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள். மஞ்சு இன்னும் எழுந்திரிக்கவில்லை. அருகில் சென்று நெற்றியை வருடி முத்தம் கொடுத்தாள்…… பின்னர் அடுத்த சில நிமிடங்களில் குளியலை முடித்து விட்டு காலை உணவுக்கான வேலைகளில் ஆயத்தமானாள். மஞ்சுவை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 7.30 மணிக்கு பள்ளி பேருந்து  எவ்வித தாமதமும் இன்றி வந்துவிடும். குளிப்பாட்டுதல், உணவு பரிமாறுதல் போன்று மஞ்சுவிற்காக செய்யும் வேலைகளை முழு திருப்தியுடனே செய்தாள். அதில் இருந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவித்தாள் சுமித்திரா. நிமிடங்கள் கடந்தன. மஞ்சுவை பள்ளிக்கு அனுப்பிவைத்தாயிற்று. அதீத சோம்பலாக படுக்கையில் கண் அயர்ந்தாள்.

2 மணிக்கு தான் கண்விழித்தாள் சுமித்திரா. மதிய உணவாக பிரட், முட்டை மற்றும் பால். 4.15 மணிக்கு மஞ்சு வழக்கம் போல சோம்பலுடனே வீடு திரும்பினாள். அடுத்த ஒரு மணி நேரம் மஞ்சுவின் அன்றைய பள்ளி விடயங்களை விலாவரியாக கேட்பது சுமித்திராவிற்கு வாடிக்கையான ஒன்று. அடுத்த ஒரு மணி நேரம் அவ்வாறே கடந்தது.  பின்னர் மஞ்சுவிற்காக இரவு உணவு தயாரிக்க ஆயத்தமானாள். சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குருமாவும் மஞ்சுவிற்கு பிடித்தமான உணவு. மணி 7. மஞ்சு இரவு உணவை முடித்து விட்டு படுக்கைக்கு சென்றாள். சுமித்திரா மீண்டும் நன்றாக குளித்து விட்டு உடைகளை எல்லாம் மாற்றி, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை வெளிவாக்கில் பூட்டி  மெஜஸ்டிகை  நோக்கி பயணமானாள்.

மெஜஸ்டிக்கில் ராகினி அக்கா சுமித்ராவிற்காக காத்துக்கொண்டிருந்தாள். சுமித்திரா ராகினி அக்காவை சந்தித்து, பின்னர் அன்றாட விடயங்களை  பேசிக்கொண்டே பேருந்து நிலைய நுழைவாயிலை நோக்கி நடந்தனர். நேரமாக நேரமாக பேருந்து நிலைய கூட்ட நெரிசல் ஒருவாறு குறைய தொடங்கியது. சில நிமிடங்கள் கடந்தன….

சுமார் 30 வயதுடைய, வட நாட்டுக்காரனைப் போன்ற தோற்றமுடைய  ஒருவன் சுமித்திரா அருகில் வந்து தன் கண் அசைவுகளினால் பேசினான்.

“ஒரு நைட்டுக்கு 800 ரூபாய்” என்றாள்  சுமித்திரா கெடுபிடியாக.

காதல் செய்வீர்*….

பதிவின் வடிவம்
  ழக்கமான ஒரு நாளாக இன்று எனக்கு அமையபோவதில்லை. அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். உள்ளுணர்வு ஒரு காரணமாக இருக்கலாம். சிறு சோம்பலும் இல்லாமல் முகமலர்ச்சியுடனே படுக்கையிலிருந்து எழுந்தேன். சாவகாசமாக அலுவலகம் செல்வதற்கு தாராளமாக நேரம் இருந்தது. புதிய வேலையில் சேர்ந்து சரியாக ஒரு மாதம் இரண்டு நாட்கள் ஆகிறது. அமெரிக்கர்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்ய இங்கு கணினியை வேலை வாங்கவேண்டும். உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட காலத்தில் அமெரிக்கர்கள்,ஆப்பிரிக்கர்கள் என்றால் முட்டாள் தனம்.
        ஒரு மாதமாகவே என் நடத்தையில் ஏற்ப்பட்ட மாற்றத்தை என்னால்  நன்கு உணர முடிகிறது. நண்பர்களிடம் வெளிக்காட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. சரியாக சொன்னால் 25 நாட்களாக  தான் இந்த மாற்றம்.  ஆம் அவளை சந்தித்து சரியாக 25 நாட்கள் ஆகின்றன. 24 நாட்கள் முன்பு வரை அவள் ‘அவளாக’ தான் எனக்கு இருந்தாள். நேற்று வருகை  பதிவேற்றில்  கையொப்பம் இடும் போது அவள் பெயரை அறியும் வரை. சோபனா அவள் பெயர். மலையாளியாக இருக்கலாம். மொழி என்றுமே பேதமில்லை என்று சமாதானம் செய்துக்கொண்டேன். எங்கள் அலுவலகத்தில் என் துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத வேறொரு துறை.  “நாந்தான்  லவ் மேரேஜ் பண்ணல நீயாவது பண்ணிக்கோடா” என அப்பா அம்மாவிடம் சண்டையிட்டு  ஒரு முறை என்னிடம் கூறியது நினைவுக்கு வருகிறது.
       என் பள்ளி பருவம் முழுவதும் ‘சேவல் பண்ணையிலே’ முடிந்தது. பெண்களின் நட்பு என்பதை நண்பர்களின் அனுபவத்தின் முலமே அறிந்தேன். பழைய வேலையிலும் பெண்களின் தொடர்பில்லா தீவாகவே என்னைச் சுற்றி மாயத் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டேன். கமண்டலம் இல்லாத விசுவாமித்திரராகவே இதுவரை இருந்திருக்கிறேன். மேனகையாக சோபனா வரும் வரை. பார்த்தவுடனேயே ஒரு வித ஈர்ப்பாக  தான் இதுவும் இருந்தது. பார்க்க பார்க்க காதலாக உருமாறியிருக்கலாம். காதலை சொல்லுவதில் பிரச்சனை இருக்கப்போவதில்லை என்று  நம்ப தோன்றுகிறது மனது. முதலில் என் இருப்பை அவளிடம் பதியப்படுத்தவேண்டும்.
         இதோ அலுவலகம் செல்லும் பேருந்து பயணத்திலும் அவள் நினைவு தான். காதில் இளையராஜா பாடல். 80 களில் காதலர்களுக்கு துணையாக இருந்த இளையராஜா இப்போது எங்களுக்கும். “பூங்கதவே தாழ் திறவாயாக” என்னுள் காதலை பாய்ச்சுகிறார். சோபனாவை முதல் முறையாக பார்த்ததை மீண்டும் ஒரு முறை நினைவுகூறுகிறேன். அன்று விரைவாகவே அலுவலகம் சென்று விட்டேன். காரணம் தெரியவில்லை. இறைவனின் சித்தமாக கூட இருக்கலாம். ஒரு காலினை இன்னொரு காலில் மடித்து கொலுசினை சரி செய்துகொண்டிருந்தாள். என் மனதில்  அழியா ஓவியமாக அக்காட்சி பதிந்துவிட்டது. அழகானவள், நளினமாக உடை அணிபவள். மதிய உணவின் போதோ, சமய சந்தர்பங்களின் போதோ மட்டும் பார்ப்பேன். இதுவரை என்னிடமிருந்து ஒரு வார்த்தையும் அவள் காதுகளை அடைந்ததில்லை. அவள் என்னை பார்க்காத தருணங்களில் என் பார்வை அவள் மீது பாயும். அவ்வளவே…
             அலுவலகத்தை அடைந்துவிட்டேன். தினமும் அவளை பார்த்த பின்பு தான் என் வேலை தொடங்குகிறது. இருப்பிடத்தில் சோபனாவை காணவில்லை. பார்வையை சுற்றிலும் அலையவிடாமல் என் இருப்பிடத்தை நோக்கி நடந்தேன். ஆச்சர்யமாக எங்கள் பகுதியில்  சோபனா கையில் இனிப்பு பெட்டியுடன் இனிப்புகளை  அனைவருக்கும் வழங்கி கொண்டிருந்தாள். பிறந்த நாளாக இருக்கலாம். என் இன்றைய இனம் புரியாத மகிழ்ச்சிக்கு காரணம் இது தானா!!! என் உள்ளுணர்வே உள்ளுணர்வு!!! தெய்வீக காதலில் மட்டும் சாத்தியம் போல. என்னை அணுகினாள். இனிப்பை எடுத்துக்கொண்டு நன்றி தெரிவித்தேன். காரணம் கேட்க தோன்றவில்லை, அவளும் சொல்லவில்லை. அவசரமாக எங்கள் பகுதியிலிருந்து அவள் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.
              ரகு வாயில் இனிப்பை  திணித்து கொண்டிருந்தான்.ஒரு  தீனிப்பண்டாரம்…..அவன் அருகில் சென்று,
             “பிறந்த நாளா?” என்றேன்.

              வாயை அசைபோட்டுக்கொண்டே ” first anniiiiveerrsaaryy ” என்றான்.

    என் காதுகளில் ஓய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என்ற சத்தம் மட்டுமே கேட்டு கொண்டுருக்கிறது…..

                                 *******          *******          *******         *******

*-காலில் மெட்டி இருக்கானு பார்த்துவிட்டு….