கிரிக்கெட் எனும் போதை!

பதிவின் வடிவம்

லைப்பை பார்த்து இது கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய ஆராய்ச்சி, விழிப்புணர்வு அல்லது இன்ன பிற இத்யாதி இத்யாதி கட்டுரை என எண்ண வேண்டாம். வழக்கம் போல சுயபுரானங்களால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமே.

கிரிக்கெட் முதல் பிரவேசம் ஐந்தாம் வகுப்புக்கு முன்னாடியே தொடங்கிவிட்டதாக நினைவு. வீட்டில் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட துவங்கிய  பாண்டி(அண்ணன்) இருந்தப் போதிலும், பயிற்ச்சிக்காக எதிர் விட்டு பிரபு அண்ணனின் உதவியை நாடினேன். காரணம்: கல்லூரி படிப்பு வரை நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் எலியும் பூனையும்.

காரணங்கள் பல இருக்கலாம், என்னைப் பார்த்ததும் பிரபு அண்ணனுக்கு முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்த சந்தோசம். தன் கடும்  முயற்சியால் எதிர்காலத்தில் உலகக் கோப்பையை வெல்லப் போகும்  ஒரு வீரனை உருவாக்கப் போகிறோம் என்ற பெருமிதமாக கூட  இருக்கலாம். சரி முதலில் பௌலிங் பயிற்சி என ஆரம்பித்தார். “பாஸ்ட் பௌலிங்கா இல்ல ஸ்பின்னா” என்பது தான்  நான் எதிர்க் கொண்ட முதல் கேள்வி. திரு திருன்னு முழிப்பதை விட வேறு எதையும் பெரிதாக சொல்லிவிட காலம் வாய்ப்பளிக்கவில்லை. “பாஸ்ட் பௌலிங்தான் உனக்கு சரியா வரும்” என என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தார். அடுத்த சில நாட்களின் 8 மணிக்கு  பிறகான இரவு பொழுது பந்து இல்லாமலே பௌலிங் போடுவது, பேட் இல்லாமலே சிக்சர், போர் அடிப்பது போன்ற பயிற்சிகளால் நகர்ந்தது.

புதிதாக கட்டப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் விடப்படுவதைப்போல நானும் எனது கிரிக்கெட் வெள்ளோட்டத்திற்கு தயாரானேன். உடனடியாகவே எதுவும் நடந்துவிடுவதில்லை. கெட்டதை தவிர. இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் காட்டி இப்படினா என்ன? எங்க இந்த பந்த பிடி பாப்போம், போன்ற ஆரம்பக் கட்ட சோதனைகளுக்கு பின்பு தான் ஓரத்தில் சிறிது உடைந்து, நூல் சுத்தப்பட்ட பழைய ஆனால் எங்க ஏரியாவிற்கே ஒரே பொதுவான அந்த பேட்டை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பே கிடைக்கும். அடுத்து சில நாட்கள் தேவுடா காத்து, அதிசயமாக ஒரு அணிக்கு வீரர் குறையும் பட்சத்தில் உப்புக்கு சப்பாணியாக பந்து வராத இடத்தில் ஒரு இடமோ அல்லது பேட் செய்ய இறங்கி ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கான  வாய்ப்புகளோ  வழங்கப்படும். இப்படியாக அணியில் ஒரு இடம் பிடித்து திரும்பிப் பார்த்தால் ஆறு மாதங்கள் ஓடியிருக்கும்.

முதல் முறையாக  பௌலிங் போடுவது  என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அமைந்துவிடுவதில்லை. “டேய் இவன் பால த்ரோ பண்றாண்டா” என சொல்லிக்கொண்டே மனசாட்சியே இல்லாமல் வசமா ஒரு அல்லக்கை சிக்கிடான் என்பது போல  பந்தை போருக்கும், சிக்சருக்கும்  விரட்டுவார்கள். ஓவருக்கு 25 ரன்களுக்கு மேல் தாராளமாக வழங்கியபின் ஃபில்டிங் போய் நின்னா டீமே காரி முகத்தில் துப்புவதை போல் ஒரு பிரம்மை வேறு. பௌலிங் தான் இப்படியென்றால் பேட்டிங் இதை விடக் கொடுமை.  மிகவும் இக்கட்டான சுழ்நிலையில்  “தம்பி நீதான் லாஸ்டு விக்கெட்டு, இன்னும் மூனு ரன்தான் எடுக்கணும், இந்த ரெண்டு பால மட்டும் தாக்குப் பிடிச்சிடு, அடுத்த ஓவர்ல அவன் அடிசிடுவான்” என சொல்லி இறக்கிவிடுவார்கள். ரன்னரும் அவனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்வைஸ் கொடுப்பான். குல தெய்வங்களை எல்லாம் மனதில் வேண்டிக்கொண்டு, கிரிஸ் லைனை சரிசெய்து, ஃபீல்டிங் ஆட்களை எல்லாம் ஒரு நோட்டம் விட்டு, மூன்று ஸ்டம்புகளையும்  முழுவதுமாக முடிந்த வரை மறைத்து, சிறு கை உதரல்களுடன்  முதல் பந்துக்கான ஸ்டாக்கை வைத்தால், பின்னாடி மிடில் ஸ்டம்ப் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது.

இப்படியாக விளையாட வீட்டிற்கே வந்து கூப்பிடும் படியான நிலைக்கு வர கிரிக்கெட்டுடன் ஒரு வருடங்களுக்கு மேல் வாழ்க்கை நடத்தி இருக்க வேண்டும். தாத்தா வீட்டு முன் உள்ள காலி இடம், பட்டமனியார் வீட்டு அரிசி மில், ஆத்தாங்கரை, இவைகளே பிரதான விளையாட்டு மைதானங்கள். இதில் ஆத்தாங்கரை என்பது லார்ட்ஸ் மைதானம் போன்றது. எந்த வித குறுக்கீடுகளும்  இல்லாமல் தாராளமாக விளையாடலாம். முக்கியமான மேட்சுகள் மட்டுமே விளையாடப்படும். தாத்தா விடு விளையாடுவதற்கு நல்ல இடம் தான், ஆனால் சிறிது உணர்ச்சி வசப்பட்டு லெக் சைடில் தூக்கி அடித்தால் உடைவதற்க்கென்றே வரிசையாக காண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். ஆத்தா மற்றும் அம்மாவால் மூன்று ஜன்னல்கள் உடையும் வரை மட்டுமே அமைதியாக இருக்க முடிந்ததது. அரிசி மில், செவ்வகமான சிமெண்ட் தரையால் ஆனா இடம். ஜான்டி  ரோட்சை மனதில் நினைத்துக் கொண்டு சாகசம் செய்ய துணிந்தால், கூட்டத்தில் காசு பொறுக்குன கதி தான். கை, கால்களில் சிராய்ப்பு ஏற்ப்பட்டு இரத்தம் இலேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.

பத்தாம் வகுப்பு நெருங்க நெருங்க கிரிக்கெட் குறைய தொடங்கியது. நாகைக்கு சென்றவுடன் முற்றிலுமாக குறைந்தது. பள்ளி இறுதி தேர்வின் கடைசி நாள் மட்டும் பேட் மற்றும் பால் கிடைக்கும் பட்சத்தில் கடற்கரையில் முடிந்த வரை ஆசையாய் நண்பர்களுடன் கேலி கிண்டலுடன் விளையாடுவோம். இப்போதெல்லாம் டீவியில் கிரிக்கெட் பார்ப்பதோடு சரி. நாட் வெஸ்ட் சீரீஸை இந்தியா வென்றவுடன் கங்குலியுடன் சேர்ந்து சட்டையை கழட்டி சுற்றிய, தோல்விக்காக கண்ணீர் விட்ட தருணங்களும் உண்டு. அனால்  இப்போதெல்லாம் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கிறதோ, தோற்க்கிறதோ… காங்கிரஸ் அரசின் மற்றுமொரு ஊழல், பிரதமரின் வெளிநாட்டு பயணம் போல அன்றைய தின வெறும் செய்திகளாக கடந்து செல்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s