நண்பன்டா # 1

பதிவின் வடிவம்

கையில் மிட்டாய்கள், முற்றிலும் ஒரு புதிய சூழல், ஒரு வித பய அல்லது பெருமித உணர்வுடன் தான் பலரையும் பள்ளியின் முதல் நாள்  தன்னுள் ஆழ்த்திகொள்ளுகிறது. அம்மா,அப்பா, அண்ணன், தங்கை  போன்ற உறவுகளை மட்டும்  அறிந்த நமக்கு ஒரு புதிய, வெவ்வேறு முகங்கள், குணங்கள் கொண்ட, வாழ்வின் கடைசி தருணம் வரை நிழலாய் வரும் ஒன்றினை முதன் முதலாய் பள்ளி நமக்கு அறிமுகப்படுத்துகிறது – நட்பினை, நண்பனை. தேர்ந்தெடுத்தலும், தேர்ந்தெடுக்கப்படுதலும் நட்பின் ஆரம்பப் பக்கங்கள் எனில் தொலைத்தலும், தொலைக்கப்படுதலும் அதன் சோகம் நிறைந்த பக்கங்கள். காலம் வற்றாமல் நண்பர்களை வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பரிசளித்தாலும் தொலைந்த, தொலைக்கப்பட்ட நட்பின் நினைவுகள் வடுவென ஆற்றமுடியாதவை…என்றைக்குமே.

சரவண குமார். நினைவில்  முதல் நண்பன். என்னுடைய ‘எனக்கானது எனக்கு மட்டுமே’ என எண்ணும் மனநிலைக்கு முற்றும் போட்டவன். விளைவாக சிலேட்டு குச்சி, பென்சில், மிட்டாய்கள் என சகலமும் எவ்வித வெறுப்பும் இன்றி  கைகள்  மாறின. எந்த விளையாட்டாக இருந்தாலும் ஒரே அணியில் இருக்கவே விரும்பினோம்,  இருந்தோம்.

ஊரின் ஒரு ஆரம்பப் பள்ளி, வகுப்பில் ஐந்தே பேர், அதில் நானும் சரவணனும். ஐந்து பேரில் முதல் இடம் வருவது பெரிய விடயமில்லை என்பதால் இருவரும் மாறி மாறி முதல் இடம் பிடித்தோம். எங்களுக்குள் இதுவே ஒரு தொடர்ந்த  போட்டியாக இருந்தது. இதனால்  எதிரிகளை போல பாவித்து கொள்வோம்  தேர்வுகள் முடிந்து முதல் இடம் நிரப்பப்படும் வரை மட்டும்.

அரையாண்டுத்  தேர்வுகளுக்கு  தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. சென்ற தேர்வில் சரவணன் முதலிடமாதலால், இம்முறை என்னுடையது. தேர்வின் இரண்டாம் நாள். ஆங்கிலம் அல்லது தமிழ்  தேர்வாக இருக்கலாம். சரியாக நினைவில்லை. தேர்வு துவங்கியும் சரவணன் வரவில்லை. எழுதும் போதும் வந்துவிட்டானா என நோட்டமிட்டுக்கொண்டேயிருக்கிறேன்.

நேரங்கள் கடந்தன. சரவணன் வரவேயில்லை. தேர்வு  முடிந்து வீடு செல்லும் தருவாயில் சரவணன் வராததற்கு காரணம் செய்தியாக கசிகிறது. சரவணனுடைய அம்மா இறந்து விட்டார்.

ஆம்…சரவணைடைய அம்மா இறந்துவிட்டார். இறப்பின்  அர்த்தம், ஒருவருடைய இறப்பின் பாதிப்பு என ஏதும் தெரியாத வயதில் சரவனுடைய அம்மாவின் இறப்பு ஒரு செய்தியாகவே எனக்கு அப்போது தெரிந்தது.  காலை எழுவதிலிருந்து  இரவு தூங்கும் வரை  அம்மாவின் துணையில்லாமல் எதுவும் நிகழா பருவத்தில், நாளையிலிருந்து அம்மா என்றைக்குமே இல்லை எனும் நிலையும், அம்மா என்னும் ஒரு ஸ்தானம் ஒரு வெற்றிடம் ஆகிவிட்ட  தருணமும் யாருக்கும் கிடைக்கக் கூடாது. சரவணனனுக்கு கிடைத்துவிட்டது.

அன்று மாலை வீட்டு வாயிலில் வழக்கம்  போல  விளையாடிக்கொண்டிருக்கிறேன். சரவணனுடைய அம்மாவின் இறுதி ஊர்வலம் சாலையில் செல்ல, வெளி சுவற்றின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டுருக்கும் செங்கற்களின் மீது  ஏறி பார்க்கிறேன். முழுவதும் நனைந்த உடலுடன், அரையில் மட்டுமான சிறு துண்டுடன் வெற்று காலுடன் சரவணன், அம்மாவின் சவத்திற்கு முன் நடந்தது வருகிறான். நன்றாக நினைவில் உள்ளது… அருகில் உள்ள துரௌபதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி ”நீயெல்லாம் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும்  எல்லை, முருகா…” என பாடிக்கொண்டிருக்கிறது.

என்னை பார்க்கும் சரவணன் அனிச்சையாக புன்னகைக்கிறான். நானும் பதிலுக்கு  புன்னகைக்கிறேன்.

அரையாண்டு தேர்வில் நான் முதலிடம். அது மட்டுமில்லாமல் அடுத்துவரும் அணைத்து தேர்வுகளிலும் நானே முதலிடம் எடுக்கும் படியாக அரையாண்டு தேர்வின் முதல் நாளே சரவணனுடைய எங்கள் பள்ளியின் கடைசி நாளாகிவிட்டது. மனைவியின் இறப்போ அல்லது வேறு காரணத்தினாலோ சரவணனுடைய அப்பா ஒரு சில நாட்களில் மாயமாகிவிட்டார். சரவணனுடைய தாய்மாமா சரவணனையும் அவனுடைய அண்ணன்களையும் தன்னுடன் வைத்துக்கொண்டு, நாகையில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாளில் 5 மணி நேரங்களுக்கு மேல் இருந்த எங்கள் சிநேகம், எங்கள் வீட்டுக்கும் அவனின் மாமா வீட்டுக்கும்  இருந்த நிலப்  பிரச்சனை போன்ற காரணங்களால் முற்றிலும் சுழியமாகிப்போனது.

வருடங்கள் கடந்து விட்டன. சைக்கிளில் எதிர்ப்படும் தருணங்களிலோ அல்லது வேறு சிறு சந்தர்ப்பங்களிலோ பரிமாறிக்கொள்ளும் புன்னகைகளிலும், சிறு விசாரிப்புகளிலும் மட்டுமே எங்கள் ஆரம்பப் பள்ளி சிநேகம் நீட்சிப் பெற்றது. அதுவும் நாகைக்கு நாங்கள் குடி பெயர்ந்தவுடன் முற்றிலுமாக குறைந்து போனது.

சரவணன் என் நினைவின் முதல் நண்பன், காலத்தின் வசத்தால் நான் தொலைத்த முதல் நண்பனும் அவனே! வருடங்கள் பல கடந்து விட்ட போதிலும் எங்கு ”நீயெல்லாம் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும்  எல்லை, முருகா…” எனும் பாடல் என் செவிகளை எட்டினாலும் சரவணனும் அவனின் அந்த இறுதி ஊர்வல பிம்பமும் என் நினைவில் நிலைப்பெருகின்றன.

”நீயெல்லாம் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும்  எல்லை, முருகா…”

(* சரவண குமார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

Advertisements

3 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s